What Is Prayer /How to Pray / ஜெபம் என்றால் என்ன? எப்படி ஜெபிக்க வேண்டும்
ஜெபம் என்றால் என்ன? What Is Prayer :
எப்படி ஜெபிக்க வேண்டும் :
1. பரமண்டலத்திலிருக்கிற பிதாவே என்று அழைத்து ஜெபிக்கச் சொல்லுகிறார்.
2.உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்று சொல்லி தேவனை நாம் துதிக்க வேண்டும் என்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.
3.உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக என்கிற வார்த்தைகளை சொல்லுகிறார்.
4.உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக என்று கேட்கச் சொல்லுகிறார்.
5.எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும் என்கிற வார்த்தைகளை சொல்லுகிறார்.
6.எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும் .
7.எங்களை சோதனைக்குட்படப்பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும் என்று சொல்லுங்கள் என்றார்.
ஜெபம் என்றால் என்ன? What Is Prayer :
ஜெபம் என்பது நமக்கும் தேவனுக்கும் இடையில் ஏற்படும் உரையாடல் ஆகும். தினமும் நாம் ஜெபிப்பதன் மூலம் நமக்கும் தேவனுக்கும் இடையிலான உறவு உறுதியாக இருக்கிறது.ஒரு குழந்தை தன் தந்தையிடம் தனக்குத் தேவையானவைகளை எப்படி கேட்கிறதோ, அதே போல நாமும் நம் பரலோகத் தந்தையிடம் நமக்கு என்ன தேவை என்பதை அறிவிக்க நமக்கு உதவி செய்கிறது இந்த ஜெபம் என்னும் இணைதல் ஆகும். இப்படி நாம் கேட்கும் பொழுது நம் பரலோக தேவன் நமக்கு எது நன்மை என்பதை அறிந்து அவருக்கு சித்தமான காரியங்களை நம் வாழ்வில் நிறைவேற்றுகிறார்.
எப்படி ஜெபிக்க வேண்டும் :
எப்படி ஜெபிக்க வேண்டும் என்ற கேள்வி புதிதாக ஜெபம் செய்யத் துவங்கியிருப்பவர்களுக்கு மட்டுமல்ல பல காலம் ஜெபித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் உண்டு. இதே கேள்வியை லூக்கா 11ஆம் அதிகாரத்தின் முதல் வசனத்தில் இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்கின்றனர். அவர்கள் அனைவரும் யூதர்கள் அவர்கள் விரும்பியிருந்தால் யூத தேவாலயத்திற்குப்போய் அங்கிருக்கும் மத குருமார்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம்.அப்படிக் கேட்டிருந்தால் அவர்கள் என்ன பதில் சொல்லியிருப்பார்கள்? அதிகாலையில் எழுந்து ஜெபம் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை ஜெபம் செய்ய வேண்டும். ஜெபிப்பதற்கென்று தனியாக ஒரு இடம் வேண்டும். அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள். நின்று கொண்டு ஜெபிக்க வேண்டுமா? அல்லது முழங்காலில் ஜெபிக்க வேண்டுமா? என்றும் சொல்லியிருப்பார்கள். எந்த திசையை நோக்கி ஜெபிக்க வேண்டும்? என்ன உடை அணிந்து ஜெபிக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் இயேசுவிடம் அந்தக் கேள்வியை கேட்ட பொழுது அதுபோல் அவர் எதையும் சொல்லவில்லை. எந்த சடங்கு சம்பிரதாயங்களும் இல்லாமல் நேராக தேவனை நோக்கி ஜெபிக்க அவர் கற்றுத்தந்தார். நம்முடைய வசதிக்கேற்ற நேரத்தில் ,வசதிக்கேற்ற இடத்தில் நம்மால் முடிந்த உடற்பாங்கில் தேவனுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்தி நம் வசதிக்குத் தகுந்தபடி நாம் ஜெபிக்கலாம். இதுதான் இயேசு நமக்குக் கொடுத்திருக்கும் சுதந்திரம். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல ஒரு நீண்ட பிரசங்கத்தை செய்யாமல் ஒரு மாதிரி ஜெபத்தைக் கொடுத்து அதைப் போல் செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.இந்த ஜெபத்தை பலரும் இன்று செய்வதில்லை. ஏனென்றால் தொடர்ந்து எல்லா வாரங்களும் இந்த ஜெபத்தை செய்வதால் இது ஒரு அர்த்தமில்லாத ஜெபமாய் மாறிவிடுகிறது. இதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது தவறு ,எழுதி வைத்து வாசிப்பதும் தவறு .இதெல்லாம் தவறு என்று சொல்லி ஜெபத்தைப் புறக்கணிப்பதும் தவறு. எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்வதற்கு இந்த ஜெபத்தில் இல்லாத எந்த ஒரு பாடத்தையும் நாம் வேறு எந்த வழியிலும் கற்றுக் கொள்ள முடியாது. இங்கு இயேசு ஜெபம் செய்வதை மட்டும் கற்றுத்தரவில்லை. அதற்கு மேலாக இந்த ஜெபம் மூலம் நாம் வாழ வேண்டிய வாழ்க்கை முறையை கற்றுத் தருகிறார். எப்படி என்று பார்க்கலாம்.
1.ஜெபத்தின் தொடக்கத்தில் பரமண்டலத்திலிருக்கிற பிதாவே என்று அழைத்து ஜெபிக்கச் சொல்லுகிறார். நாம் ஜெபம் செய்வது தூரத்தில் உள்ள யாரோ ஒருவரோடு அல்ல, நம் பக்கத்தில் உள்ள நம் தகப்பனுடன் என்று என்ற நினைவுடன் ஜெபிக்க வேண்டும்.
2.உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்று சொல்லி தேவனை நாம் துதிக்க வேண்டும் என்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறார். துன்பத்துடன், பயத்துடன், கவலையோடு நாம் ஜெபித்தாலும் கர்த்தரை துதிக்க வேண்டும் என்பதை நமக்கு வெளிப்படுத்துகிறார்.நம் வாழ்க்கை சூழல் நாம் கர்த்தரை துதித்து மகிமைப்படுத்துவதற்கு தடையாக இருக்கக்கூடாது.
3.உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக என்கிற வார்த்தைகளை சொல்லுகிறார். ஜெபத்தில் நாம் முதலாவதாக வைக்க வேண்டிய விண்ணப்பம் இதுதான். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் தான் அவருடைய அவருடைய இராஜ்ஜியம் இந்த பூமியில் ஸ்தாபிக்கப்படப்போகிறது.அந்த நாள் சீக்கிரம் வரவேண்டும் என்கிற ஆசை எதிர்பார்ப்பும் நமக்கு இருக்க வேண்டும்.
4.உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக என்று கேட்கச் சொல்லுகிறார். இந்த உலகம் முழுவதும் தேவனுடைய சித்தப்படி இயங்க வேண்டும். உலகத்து மக்கள் அவருடைய சித்தப்படி வாழ வேண்டும் என்பதை நம் ஜெபத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.இப்படி ஜெபிப்பது எளிது ஆனால் அதனுடைய அர்த்தம் என்ன தெரியுமா? மற்றவர்கள் வாழ்க்கையில் தேவனுடைய சித்தம் நிறைவேற வேண்டும் என்றால் முதலில் நம்முடைய வாழ்க்கையில் அவருடைய சித்தம் நிறைவேற வேண்டும். அவருடைய சித்தம் நம் வாழ்வில் நிறைவேறுகிறது என்றால் நம்முடைய சித்தம் நிறைவேறவில்லை என்று அர்த்தம்.ஆகையால் நமக்கென நாம் வைத்திருக்கும் திட்டங்கள், ஆசைகள் எல்லாவற்றையும் விட்டுவிட மனதிருந்தால் தான் இந்த ஜெபத்தை நாம் செய்ய முடியும்.
5.எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும் என்கிற வார்த்தைகளை சொல்லுகிறார். ஆகாரம் என்பது இந்த உலகத்தில் வாழத்தேவையான பொருட்களை குறிக்கும். இதை ஜெபத்தில் கேட்கச்சொல்லுகிறார். நம்மில் பெரும்பாலானோர் அடிப்படை தேவைகளுக்காக ஜெபம் செய்வதில்லை. ஆனால் அடிப்படைக்கும் அதிகமான தேவைகளுக்காக ஜெபிக்கிறோம். இப்படி அவர் கொடுப்பதை விட அதிகமாகக் கேட்கும் பொழுது அவர் வரைந்திருக்கும் வட்டத்தை விட்டு வெளியே சென்று விடுகிறோம். அதுமட்டுமல்ல எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும் என்று சொல்லச் சொல்கிறார். அன்றன்றைக்கு உள்ள ஆகாரத்தை அன்றன்று நிச்சயம் கொடுப்பார். ஆகையால் எதிர்காலத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று கவலைப்படாமல் வாழ இந்த வார்த்தைகள் நமக்கு நம்பிக்கையை கொடுக்கிறது.
6.எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும் நாங்களும் எங்களிடம் கடன்பட்ட வர்களுக்கு மன்னிக்கிறோமே நீங்கள் எங்களுக்கு மன்னிக்கிறது போல் நாங்கள் மற்றவர்களுக்கு மன்னிக்க உதவி செய்யுங்கள் என்று சொல்லியிருந்தால் நமக்கு எளிதாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் அவர்களுக்கு மன்னிக்கிறது போல் எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும் என்று சொல்லுகிறார். இதன் மூலம் நம்மை ஒரு தப்பிக்க முடியாத நிலையில் அவர் வைத்துவிட்டார்.மற்றவர்கள் நமக்கு செய்த தீமையை மன்னிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கும் பொழுது மன்னிக்கப்பட முடியாத ஒரு நிலைக்கு நம்மை நாமே வைத்துக் கொள்கிறோம் என்பதை அவர் நமக்கு நினைவு படுத்துகின்றார்.
7.எங்களை சோதனைக்குட்படப்பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும் என்று சொல்லுங்கள் என்றார். அதாவது பாவம் செய்யக்கூடிய சூழ்நிலைக்கு நாம் போகாமல் தீமை செய்து விடாமலும் நாம் வாழ்வதற்கு அவருடைய உதவி நமக்கு அனுதினமும் தேவை என்பதை இங்கே தெரிந்து கொள்ள வேண்டும். பாவம் செய்யும் சூழ்நிலைக்கு நாம் போகாமல் அவர் நம்மை பாதுகாக்க வேண்டும் என்று ஜெபிப்பதால் அந்த பாவங்களை செய்கிற சூழ்நிலைக்குள் நாம் போய் உட்கார்ந்து கொண்டு அவர் பாதுகாப்பார் என்று நினைக்கக் கூடாது. பாவம் செய்யும் வாய்ப்பு எங்கெல்லாம் உண்டோ அந்த இடத்தில் இருக்கவே கூடாது. அப்படிப்பட்ட உறவுகளையும் நாம் தவிர்க்க வேண்டும்.
ஜெபம் எப்படி செய்வது என்றுதான் நாம் அறிந்து கொள்ள ஆசைப்படுவோம். ஆனால் இந்த ஜெபத்தின் மூலம் நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை இயேசு மிக நேர்த்தியாக கற்றுக்கொடுத்திருக்கிறார். அவர் நம்முடைய அப்பா என்ற உரிமையுடன் நம் சூழ்நிலை எப்படி இருந்தாலும் அவரைத்துதிக்க வேண்டும். நம்முடைய இராஜ்ஜியம் அல்ல அவருடைய இராஜ்ஜியம் வரவேண்டும் என்பது நம் முதல் நோக்கமாக இருக்க வேண்டும். நமக்குத் தேவையானவற்றை நாமே அடைந்து விடலாம் என்ற சுயத்திலிருந்து வெளியில் வந்து எல்லாவற்றிற்காகவும் அவரை சார்ந்து வாழ வேண்டும். அவர் கொடுக்கிறேன் என்று சொன்னதற்கு மேலாக ஆசைப்படக்கூடாது. எதிர்காலத்தைக்குறித்துக் கவலைப்படக் கூடாது. மற்றவர்கள் நமக்கு செய்த தீமையை மன்னிப்பதற்கு தயாராக இல்லாமல் நமக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நினைக்கக் கூடாது. பாவம் செய்யும் எந்த சூழ்நிலையிலும் நாம் இருக்கக் கூடாது.
எந்த நேரத்தில் ஜெபிக்கிறோம் எந்த இடத்தில் ஜெபிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. அவர் அந்த ஜெபத்தில் நமக்கு கற்றுக் கொடுத்தபடி வாழ்ந்துகொண்டு ஜெபிப்பது தான் முக்கியம்.
தேவன் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!! ஆமென்.
0 Comments
Thank you for visit my page 🙏